×

புதுகையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 16 மணி நேர சோதனை அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர் மனைவிக்கு சம்மன் அனுப்ப முடிவு: 83 சவரன் நகை, கோடிக்கணக்கில் சொத்து ஆவணம் பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (47). ஊரக வளர்ச்சிதுறை உதவியாளர். இவரது மனைவி காந்திமதி (38). முள்ளங்குறிச்சி ஊராட்சி தலைவர். அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளரான முருகானந்தம், அரசு ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வந்ததாக தெரிகிறது. இவர், கடந்த 2017 முதல் 2020 வரை 3 ஆண்டுக்குள் ரூ.15 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள (1260 மடங்கு) சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் முருகானந்தம், காந்திமதி ஆகியோர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில் காலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இரவு 10 மணிக்கு முடிந்தது. ரூ.80 லட்சம் மதிப்பிலான பென்ஸ் சொகுசு கார் மற்றும் 2 இனோவா கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் நடத்திய சோதனையில் 83 சவரன் நகை, 3.7 கிலோ வெள்ளி, ரூ.46,160 ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள், தொழில் முதலீட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதேபோல் புதிய பேருந்து நிலையம் அருகே முருகானந்தத்தின் தம்பி பழனிவேலுவின் (45) விஜய்பேலஸ் வணிக வளாகம், பழைய அரசு மருத்துவமனை எதிரே உள்ள விஜய் மகளிர் விடுதி ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. முருகானந்தத்தின் அண்ணனான திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரான ரவிச்சந்திரனின் (58) கடுக்காகாடு வீட்டில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடந்தது. 10 மணி நேரம் நடந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளி சென்றனர்.இதேபோல் கிராமத்தில் உள்ள முருகானந்தம், பழனிவேலுவின் வீடுகளிலும் 10 மணி நேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள், கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர்.இதுபற்றி லஞ்ச ஒழிப்புதுறை வட்டாரத்தில் விசாரித்த போது, முருகானந்தம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, முக்கிய ஆவணங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் விசாரணைக்கு வருமாறு கணவன், மனைவி இருவருக்கும் சம்மன் அனுப்பப்படும். அப்போது தம்பதி கைதாகலாம். மேலும் முருகானந்தத்தின் சகோதரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனர். தோப்புகளை வாங்கி குவித்த முருகானந்தம் முருகானந்தத்தின் மனைவி காந்திமதியின் சகோதரர் லெட்சுமணன். இவர் கோழி கறிக்கடை வைத்திருந்தார். 2017ல் அந்த தொழிலை விட்டு விட்டு திடீரென ரியல் எஸ்டேட் புரோக்கரானார். இதனால் அவரும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தார். இவர் மூலம், முருகானந்தம் கடுக்காகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னந்ததோப்புகளை வாங்கி குவித்துள்ளார். இதே போல் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே வேங்கூரில் 400 ஏக்கர் தென்னந்தோப்பை குடும்பத்தினர் பெயரில் மைத்துனர் லெட்சுமணன் மூலம் சமீபத்தில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post புதுகையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 16 மணி நேர சோதனை அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர் மனைவிக்கு சம்மன் அனுப்ப முடிவு: 83 சவரன் நகை, கோடிக்கணக்கில் சொத்து ஆவணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : New Guadu ,Samman ,Minister of Maji ,Sawaran ,Pudukkotta ,Murukanandam ,Kadukkavadu ,Vetton ,Pudukkotta District ,Rural Development Department ,New Dinakaran ,Minister ,Dinakaran ,
× RELATED பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன்